×

தலைவர்கள் கருத்து

மத்திய பட்ஜெட் குறித்து தலைவர்கள் கூறியுள்ள கருத்துகள்: ராகுல் காந்தி (காங்கிரஸ்): வேலைவாய்ப்பின்மை நாட்டில் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தேவையற்ற விஷயங்கள்தான் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது. மத்திய அரசின் எந்த யோசனையும் இதில் இல்லை. இது அரசின் மனப்போக்கை காட்டுவதாக உள்ளது. எல்லாமே பேச்சுக்கள் மட்டும்தான். 2 மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரை இருந்தபோதிலும் அதில் எதுவுமே கிடையாது வெற்றுதான்.

சீதாராம் யெச்சூரி (மார்க்.கம்யூ): மத்திய அரசின் பட்ஜெட் முழுவதும் வெற்று உரை மற்றும் பழைய பல்லவிகள் தான் இடம் பெற்றிருந்தது. மக்களின் துயரங்கள், பெருகி வரும் வேலையின்மை பிரச்னை, கிராமப்புற வேலை வீழ்ச்சி, விவசாயிகளின் தற்கொலை மற்றும் விலைவாசியை குறைப்பதற்கு என எந்த அம்சங்களும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. டெரிக் ஓ பிரைன்( திரிணாமுல் காங்.): வரி குறைப்பு குறித்து பொய் கூறாதீர்கள். வரி குறைப்பு விவரங்கள் அடங்கிய பக்கத்தை நன்றாக படித்து பாருங்கள். சமூக பாதுகாப்பு இல்லாத நாட்டை பாதுகாப்பதற்கான ஊக்கத்தொகையை அரசு நீக்கியுள்ளது. 100க்கு 70 சதவீத வரி விலக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த விலக்குகள் பிபிஎப், எல்ஐசி மற்றும் சுகாதார காப்பீடு போன்ற திட்டங்களில் பணத்தை சேமிப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.  

அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி): பட்ஜெட்டில் இருந்து டெல்லிக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்தது. ஆனால், மீண்டும் மாற்றாந்தாய் மனப்போக்கான செயல்பாட்டை தான் டெல்லி எதிர்கொண்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக டெல்லி மக்களை மத்திய அரசு ஏமாற்றி விட்டது. தேர்தலுக்கு பின்னராவது கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்(பாஜ): மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட புதிய ஆண்டின் முதல் பட்ஜெட்டானது புதிய மற்றும் உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாக இருந்தது. வருங்காலத்தில் வளமும் நலமும் மிகுந்த இந்தியாவை உருவாக்குவதற்கான செயல்திறன் மற்றும் முற்போக்கான பட்ஜெட். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ( திரிணாமுல் காங்): மத்திய பட்ெஜட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பொது நிறுவனங்களின் பாரம்பரியத்தையும் மரபுகளையும் பதுங்கியிருந்து தாக்கும் அரசின் திட்டங்களை கண்டு மிரட்சியடைந்தேன்.


Tags : Leaders comment...
× RELATED கர்நாடகாவில் ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி